Tuesday, 30 October 2012

நீலம் புயல்

தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக உருமாறியுள்ள நிலையில் சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று வரை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று ஒரே  இடத்தில் நிலை கொண்டிருப்பதால்,புயலாக உருமாறி இருப்பதாகவும், இந்த புயலுக்கு '' நீலம் ' என பெயரிடப்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும்  கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்புயல் காரணமாக ,கடலூர்,நாகப்பட்டினம்,புதுச்சேரி, பாம்பன், எண்ணுர்,  தூத்துக்குடி துறைமுகங்களில்  புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது பெய்யும் கன மழை இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின்  கடலோர மாவட்டங்களில் மிக கன மழையாக தீவிரமடையும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு எச்சரிக்கை 


மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 48 மணி  நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வங்கக் கடலில்  உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை  பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து  வருகிறது. இதனிடையே புயல் சின்னம் காரணமாக மணிக்கு எழுபது முதல் 90  கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

தகவல் மையம்

புயல் மற்றும் வெள்ளச்சேதம் பற்றிய விவரங்களை அறிய, சென்னையில் தகவல்  மையம் திறக்கப்பட்டுள்ளது.அவசர உதவிகளுக்கு, 044-28447727 என்ற தொலைபேசி  எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னையில் புயல், மழை பற்றிய விவரங்களை அறிய, 044-28447734 என்ற  எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக  சென்னையின் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குறிப்பாக  மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி இடையே மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருவதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக மெட்ரோ ரயில் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு
புயல் சின்னத்தையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1500 விசைப் படகுகளும், 1000 பைபர், கட்டுமரங்களும் கடலுக்குள் செல்லவில்லை. அவை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம், மெரீனா பகுதியில் கடல் அலை சீற்றமாக இருந்தது. கோவளம், மாமல்லபுரம், கானாத்தூர், நெம்மேலி, செம்மஞ்சேரி, கடலிலும் அலை அதிக சீற்றத்துடன் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக மீனவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனர்.

புயல் தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment